இராணுவத்தினரால் நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு திட்டம் முன்னெடுப்பு

“தூய நகரம் - ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற தேசிய டெங்கு ஒழிப்பு திட்டத்திற்கமைய, 2026 ஜனவரி 07 முதல் 09 வரை 56 வது காலாட் படைப்பிரிவு பிரதேசத்தில், சுகாதார சேவைகள் பணிப்பகத்தின் வழிகாட்டுதல் மற்றும் தொடர்புடைய அரச அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் டெங்கு ஒழிப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

56 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையின் கீழ், 561 காலாட் பிரிகேட் படையினர், 10வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 16 வது இலங்கை சிங்க படையணி ஆகியவற்றின் படையினரின் பங்களிப்புடன், சுற்றுச்சூழல் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாலிநகரின் பொது இடங்கள், கொல்லவிலங்குளம் மற்றும் கரப்புக்குத்தி பாடசாலை வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டன. மேலும் நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுவதற்காக ஏ9 பிரதான வீதியில் இருபுறமும் சுமார் 7 கி.மீ தூரத்திற்கு சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர்.

இதேபோல், 7 வது இலங்கை சிங்க படையணி மற்றும் 8 வது கெமுனு ஹேவா படையணி படையினரின் பங்கேற்புடன் 563 வது காலாட் பிரிகேட் படையினர், 2026 ஜனவரி 07 முதல் 09 வரை முறையான துப்புரவுத் திட்டங்களை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கைகள், மாமதுவ மருத்துவமனை மற்றும் போகஸ்வெவ மருத்துவமனை ஆகியவற்றில் தேங்கி நிற்கும் நீரை அகற்றுதல், ஓமந்தை பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்தல் மற்றும் டெங்கு பெருகும் இடங்களைக் குறைக்க வீதியோரப் பகுதிகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.

இதற்கிடையில், 562 வது காலாட் பிரிகேட் 2026 ஜனவரி 07 முதல் 09 வரை, 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையில், அதன் எல்லைப் பிரதேசத்தில் தொடர்ச்சியான டெங்கு ஒழிப்பு திட்டங்களை மேற்கொண்டது.

17 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 12 (தொ) விஜயபாகு காலாட் படையணியின் படையினரின் பங்கேற்புடன், 562வது காலாட் பிரிகேட் படையினர் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் சுற்றுச்சூழல் தூய்மையாக்கும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நுளம்புகள் பெருகும் இடங்களைக் குறைப்பதற்காக, பம்பைமடு வரோத் மாற்றுத்திறனாளிகள் நல விடுதி, பாரதி வித்தியாலயம், சின்ன வலையன்கட்டு பாடசாலை, விளாத்திகுளம் பாடசாலை மற்றும் பிரசன்குளம் மர்னிலா பாலர் பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்வதற்கு முன்னுரிமை அளித்தனர்.

டெங்கு ஒழிப்பு திட்டம் 562 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டி.எம்.பீ.யூ. திசாநாயக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்டது. இப்பகுதியில் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இத்திட்டம் காணப்பட்டது.