ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.பீ.என்.ஏ. முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ சேவையினை நிறைவு செய்து, இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் 2025 ஒக்டோபர் 08 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:

மேஜர் ஜெனரல் எம்.பீ.என்.ஏ. முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பாகிஸ்தான் கல்வியற் கல்லூரியில் பாடநெறி 03 இல் இலங்கை இராணுவத்தின் நிரந்தரப் படையில் 1991 ஏப்ரல் 29 ஆம் திகதி பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். பாகிஸ்தான் இராணுவ கல்வியற்கல்லூரி மற்றும் தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் 1992 ஏப்ரல் 14 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை சிங்க படையணியில் பணியமர்த்தப்பட்டார். அவர் தனது சேவைக் காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டு 2024 செப்டம்பர் 30 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

சிரேஷ்ட அதிகாரி 2025 ஒக்டோபர் 20 ம் திகதி தனது 55 வயதை அடைந்ததும், இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். ஓய்வு பெறவுள்ள சிரேஷ்ட அதிகாரி 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக பதவி வகிக்கின்றார்.

சிரேஷ்ட அதிகாரி தனது பணிக்காலத்தில், 5 வது (தொ) கஜபா படையணியின் குழுத் தளபதி, 6 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் குழுத் தளபதி, 9 வது இலங்கை சிங்க படையணியின் குழுத் தளபதி இராணுவப் பயிற்சி பாடசாலையில் குழுத் தளபதி, 9 வது இலங்கை சிங்க படையணியின் அதிகாரி கட்டளை, 23 வது காலாட் படைப்பிரிவில் பொதுப் பணிநிலை அதிகாரி 3 (செயற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு), 22 வது காலாட் படைப்பிரிவின் அப்போதைய தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.எஸ்.சீ. பொன்சேகா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ ஆர்சீடிஎஸ் பீஎஸ்சீ அவர்களின் உதவியாளர், 512 வது காலாட் பிரிகேடில் பொதுப் பணிநிலை அதிகாரி 3 (செயற்பாடுகள்), இலங்கை சிங்கப் படையணியின் பொதுப் பணிநிலை அதிகாரி 3 மற்றும் பொதுப் பணிநிலை அதிகாரி 2, இலங்கை சிங்கப் படையணியின் பொதுப் பணிநிலை அதிகாரி 2 (நிர்வாகம்), சூடானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இராணுவக் கண்காணிப்பாளர், 4 வது இலங்கை சிங்க படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 4 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி, 27 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி, 61 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயற்பாடுகள்), பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் பொதுப் பணிநிலை அதிகாரி 1, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயற்பாடுகள்), இராணுவத் தலைமையக ஆளணி நிர்வாக பணிப்பகத்தில் கேணல் (நிகழ்வு), இராணுவத் தலைமையகத்தில் நிறைவேற்று பணிப்பாளர்கள் கிளையின் கேணல் (நிர்வாகம்), 572 வது காலாட் பிரிகேட் தளபதி, இலங்கை சிங்க படையணியின் தலைமையகத்தின் நிலைய தளபதி, ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் பயிற்சி மற்றும் கண்காணிப்பு பிரிவின் தலைவர், ஆட்சேர்ப்பு பணிப்பகத்தின் பணிப்பாளர், 59 வது காலாட் படைப்பிரிவின் பிரதித் தளபதி மற்றும் 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகிய பதவிகளை வகித்ததுடன் தற்போது 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக பதவி வகிக்கின்றார்.

இலங்கை இராணுவத்திற்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலான சேவையை பாராட்டி அவருக்கு உத்தம சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இராணுவப் பயிற்சியைப் பொறுத்தவரை, அடிப்படை நுண்ணறிவு பாடநெறி, இயந்திரப் போக்குவரத்து அதிகாரிகள் பாடநெறி, கனிஷ்ட பணிநிலை அதிகாரிகள் புத்தாக்கப் பாடநெறி மற்றும் இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி உள்ளிட்ட பல உள்நாட்டு பாடநெறிகளை பயின்றுள்ளார்.

பாகிஸ்தானில் பயிலிளவல் அதிகாரி குறுகிய சேவைப் பாடநெறி, இந்தியாவில் படையணி சமிக்ஞை அதிகாரிகள் பாடநெறி, இந்தியாவில் இளம் அதிகாரிகள் பாடநெறி, பாகிஸ்தானில் இடைநிலை தொழில் பாடநெறி, பாகிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபையின் குடிமக்கள் பாதுகாப்பு பாடநெறி மற்றும் ஆஸ்திரேலியாவில் அனர்த்த சுகாதார அம்சங்கள் பாடநெறி ஆகியவை அவரது சர்வதேச பயிற்சியில் அடங்கும்.

சிரேஷ்ட அதிகாரி சர்வதேச வர்த்தகம் மற்றும் போக்குவரத்து கல்வியற் கல்லூரியில் பன்முகத்தன்மை போக்குவரத்து மற்றும் வழங்கல் குறித்த அடிப்படை பாடநெறி, அதே கல்வியற் கல்லூரியில் வழங்கல் சேவைகள் சரக்கு அனுப்புதல் மற்றும் பன்முகத்தன்மை குறித்த சான்றிதழ் பாடநெறி, சர்வதேச வர்த்தகம் மற்றும் போக்குவரத்து கல்வியற் கல்லூரியில் சரக்கு அனுப்புதல் டிப்ளோமா, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முதுகலை முகாமைத்துவ நிறுவனத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் போன்ற பாடங்களையும் பயின்றுள்ளார்.