இலங்கை இராணுவத்தினால் நாடு முழுவதும் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கான தொடர் நலன்புரி முகாம்

இராணுவ தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் போர்வீரர்கள் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம், இராணுவ சேவை வனிதையர் பிரிவுடன் இணைந்து, 2026 பெப்ரவரி 24 ஆம் திகதி திருகோணமலை 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில், தொடர்ச்சியான நலன்புரி திட்டங்களின் ஒரு பகுதியாக, ஊனமுற்ற ஓய்வுபெற்ற போர்வீரர்களுக்கான மருத்துவ முகாமை நடாத்தியது. திருகோணமலை மாவட்டத்தில் வசிக்கும் இராணுவ வீரர்களின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களுடன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். வருகை தந்த பிரதம விருந்தினர்களை கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ. பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் மரியாதையுடன் வரவேற்றனர்.

இந்நிகழ்ச்சியின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் ஊன்றுகோல்கள் மற்றும் ஏனைய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவ ஆலோசனைகள், செயற்கை உறுப்பு பராமரிப்பு, தோல் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ சேவை, கண் மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து வழிகாட்டுதல் ஆகியவை இடம்பெற்றன. இந்த திட்டத்தின் மூலம் மருத்துவ ரீதியாக ஓய்வுபெற்றவர்கள் மற்றும் படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 1,500 க்கும் மேற்பட்ட தனிநபர்கள் பயனடைந்தனர்.

மேலும், முதன்மை பதவி நிலை அதிகாரிகள், இராணுவ தலைமையக பணிப்பகங்களின் பணிப்பாளர்கள், ரணவிரு சேவா அதிகாரசபை உறுப்பினர்கள், சம்பளம் மற்றும் பதிவுகள் பணிப்பகம், ஆளணி நிர்வாக பணிப்பகம், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகம், நலன்புரி பணிப்பகம், போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம் மற்றும் இராணுவ மருத்துவ பணிப்பகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.