2026 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இராணுவத் தளபதியினால் மரம் நடும் நிகழ்ச்சி ஆரம்பித்து வைப்பு
2026 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, “பொறுப்புடன் வேரூன்றுவோம் – தலைமுறைகளுக்காக வளர்ப்போம்” என்ற கருப்பொருளின் கீழ், 2026 ஜூன் 05 ஆம் திகதி பத்தரமுல்லை இராணுவ விவசாய திட்ட வளாகத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திட்டத்தின் நோக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதும், அர்த்தமுள்ள செயல்கள் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு நீடித்த பாரம்பரியத்தை உருவாக்குவதும் ஆகும்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தார். இத்திட்டத்தின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில், இராணுவத் தளபதியினால் வளாகத்தில் ஒரு 'இலுப்பை' மரக்கன்று நடப்பட்டது.
இந்த சுற்றுச்சூழல் திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், அலையன்ஸ் பைனான்ஸ் பீஎல்சீ நிறுவனம் 5,000 மாங்கன்றுகளையும் 5,000 தென்னம்பிள்ளைகளையும் நன்கொடையாக வழங்கியது. இந்நிகழ்ச்சியின் போது, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழள்ள படையணியின் பிரதிநிதிகளிடம் 25 மரக்கன்றுகள் அடையாளப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.
மேலும், இத்திட்டத்தின் போது இலங்கை இராணுவ வீரர்கள் 100 ‘இலுப்பை’ மரக்கன்றுகளை நட்டு, பசுமைப் போர்வையை மேம்படுத்துவதற்கும் நிலையான சுற்றுச்சூழல் நடைமுறைகளை ஊக்குவிப்பதற்குமான தொடர் முயற்சிகளுக்குப் பங்களித்தனர்.
இந்நிகழ்ச்சியில், இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அலையன்ஸ் பைனான்ஸ் பீஎல்சீ இன் பிரதிநிதிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.