இராணுவ சிவில் ஊழியர்களுக்கான நிரந்தர நியமனக் கடிதங்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் கையளித்து வைத்தார்
இலங்கை இராணுவத்தின் சிவில் ஊழியர்களுக்கான நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 2026 ஜூன் 01 ஆம் திகதி பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது. கோட்டே பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் (DHQC), அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு வருகை தந்த பிரதி அமைச்சரை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ வரவேற்றார்.
இந்நிகழ்ந்தவின் போது பல ஆண்டுகளாக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 826 சிவில் ஊழியர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவை பாராட்டப்பட்டதுடன், அவர்கள் இலங்கை இராணுவத்தின் நிரந்தர சிவில் பணியாளர் அணியில் உத்தியோகபூர்வமாக உள்வாங்கப்பட்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர், தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கிய தொழில் பாதுகாப்பின்மைக்கு தீர்வு காணும் நோக்கில், அரசாங்கத்தின் கொள்கைக்கும் 2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கும் அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்தார். பல ஆண்டுகளாக நிரந்தர நியமனம் இன்றி பணியாற்றிக் கொண்டிருக்கும் இப்பணியாளர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படுவது சமூக மற்றும் பொருளாதார நீதியை உறுதிப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகும் என்றும், இது அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் வேலைவாய்ப்பு பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், யுத்தக் காலத்திலும் அதற்கு பிந்தைய தேசிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளிலும் இராணுவ சிவில் ஊழியர்கள் வழங்கிய அரிய பங்களிப்பை அவர் பாராட்டினார். சிவில் ஊழியர்கள் இராணுவ அமைப்பின் பிரிக்க முடியாத அங்கமாக இருப்பதை வலியுறுத்திய அவர், தொடர்ந்தும் அர்ப்பணிப்பு, தொழில்முறை நேர்மை மற்றும் ஒழுக்கத்துடன் சேவையாற்றுமாறு கேட்டுக்கொண்டார். அவர்களின் நலன்களை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், நியாயமான ஊதியம், கொடுப்பனவுகள், மருத்துவ வசதிகள் மற்றும் பிற நலன்புரி சலுகைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தார். மேலும், இலங்கை மக்களால் தங்கள்மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையில் அனைத்து அரச ஊழியர்களும் தமது கடமைகளை பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வில் இராணுவ பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன உட்பட இராணுவத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் சிரேஷ்ட சிவில் நிர்வாக அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.
(தகவல்: www.defence.lk)