Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th April 2022 15:15:55 Hours

107 வது அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து போர் வீரர் தின நிகழ்வில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி பங்கேற்பு

அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து இராணுவப் படையணிகளின் தலைமையிலான வீரமிக்க உயிர்நீத்த போர்வீரர்கள் மற்றும் அப்படையணியில் அங்கம் வகித்த சிலோன் பிலான்டர்ஸ் ரைபிள் படையணி உறுப்பினர்களின் விலைமதிப்பற்ற அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற தியாகங்களை நினைவுகூறும் 107 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று (25) காலை “அவுஸ்திரேலிய இல்லத்தில்” நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கையை தளமாகக் கொண்ட உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், இராஜதந்திரிகள், பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் ஏனைய அழைப்பு விடுக்கப்பட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயங்களுடன் இலங்கை ஆயுதப் படைகள் கொண்டுள்ள நல்லுறவை அடையாளப்படுத்தும் வகையில், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹோலி, நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டோன் இணைந்து அழைப்பு விடுத்திருந்தமை சிறப்பம்சமாகும்.

இதன்போது முப்படைகளின் சார்பாக நினைவு கொடிக்கம்பத்தின் முன்பாக மலர் அஞ்சலி செலுத்துவதற்காக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்களால் அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்போது இலங்கை ஆயுதப் படைகளை பிரதிநிதித்துவப்படுத்துவோரை நினைவுகூர்ந்த தளபதியவர்கள் மரியாதையும் செலுத்தினார்.

ஆவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து இராணுவப் படையணிகளின் நினைவுகூரல் (ANZAC) தினம் 1916 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் திகதியும் அனுட்டிக்கப்பட்டு வருகிறது. துருக்கியுடனான யுத்தத்தின் போது கலிபோலியிருந்து வெளியேறும் முன்பாக நேச நாட்டு படைகளின் அங்கம் வகித்த அவுஸ்திரேலிய வீரர்கள் பலரும் உயிர் நீத்தனர். 1915 ஆம் ஆண்டு இறுதியில் மேற்படி போர் வீரர்களின் தியாகம் வலுவான நினைவுகளை விட்டுச் சென்றது.

மேற்படி, நினைவேந்தல் நிகழ்வின் போது 107 வது ஆண்டு நிறைவு நிகழ்வை அனுட்டிக்கும் வகையில் போர் மற்றும் ஏனைய மோதல்களின் போது உயிரிழந்த மூன்று நாடுகளையும் சேர்ந்த வீரர்களின் தியாகங்களை நினைவுக்கூறி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹோலி அவர்கள் 1915 ஆம் ஆண்டின் இறுதியில் நேச நாட்டுப் படைகள் வெளியேற்றப்படும் வரை நேச நாட்டு படைகளில் அங்கத்துவம் வகித்த போது போரில் இலங்கை படையினர் உள்ளிட்ட உயிர்நீத்த அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து படை வீரர்களை நினைவுகூர்ந்ததோடு அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதேநேரம் நேச நாட்டுப் படைகளில் இலங்கை படையினர் ‘Ceylonese’ தோள் கொடுத்து உதவிய விதம் தொடர்பிலும் உரையாற்றினார்.

அதனையடுத்து நியூசிலாந்துக்கான உயர்ஸ்தானிகர் அதிமேதகு மைக்கல் எப்பல்டோன் மற்றும் இலங்கைக்கான துருக்கிய தூதுவர் அதிமேதகு ரகீப் டெமெய்ட் செகர்சியோக்லூ அவர்களும் நிகழ்வில் உரையாற்றினார்.

அதனையடுத்து ஜெனரல் சவேந்திர சில்வா, உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் நிகழ்விற்கு அழைக்கப்பட்டவர்களுடன் சில எண்ணங்களை பகிர்ந்துகொண்டார்.

தேயிலை மற்றும் இறப்பர் தோட்டப் பணிகளுக்காக கண்டியில் நிறுவப்பட்ட சிலோன் பிளாண்டர்ஸ் ரைபிள் படையணியின் வீரர்கள் 1914 ஆம் ஆண்டில் முதலாம் உலப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் எகிப்துக்கு சென்றிருந்ததோடு, 1915 ஆம் ஆண்டில் சிலோன் பிளாண்டர்ஸ் ரைபிள் படையணியின் மற்றுமொரு குழுவினரும் எகிப்துக்கு சென்றிருந்ததோடு அந்நாட்டின் அரி பர்னு கரையோர பகுதிகளில் நிலைகொண்டிருந்த ANZAC படையணியுடன் இணைந்து சேவையாற்றியிருந்தனர். பிற்காலத்தில் இப்படைகளுக்கு அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து நேசநாட்டு படைகள் (ANZAC Cove) என பெயரிடப்பட்டதாக 'கல்லிபோலியிலிருந்து 100 ஆண்டுகள்' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.