Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th January 2022 09:30:35 Hours

மறுசீரமைக்கப்பட்ட கூரகல விகாரைக்கு அதிமேதகு ஜனாதிபதியவர்கள் விஜயம்

தொல்லியல் பிரதேசங்களை பாதுகாக்கும் திட்டத்திற்கமைய பலாங்கொடை ஹோமோ சேபியன் மனிதன் காலத்திற்கும் முற்பட்ட காலத்துக்குரியதென கருதப்படும் வரலாற்று சிறப்பு மிக்க கல்தோட்டை கூரகல விகாரையின் மறுசீரமைப்பு திட்டத்தை நனவாக்கிய அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்கள், (16) பிற்பகல் மேற்படி புனித தளத்திற்கான திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டார். இதன்போது, மறுசீரமைக்கப்பட்ட கூரகல தூபியின் (எசி திசி மகா சேயா) படங்கள் மற்றும் கலைப்பொருட்களை பிரதிஷ்டை செய்வதற்கான நிகழ்வில் நாட்டின் முதல் பெண்மணி அயோமா ராஜபக்‌ஷ அவர்களுடன் கௌரவ அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, பாராளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவல, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததோடு அவர்களுக்கு நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்தின் தலைவரும் கூரகல விகாரையின் விகாராதிபதியுமான வண. வத்துரகும்புரே தம்மரதன தேரரினால் வரவேற்பளிக்கப்பட்டது.

கூரகல மடாலயம் முற்பட்ட வரலாற்று சிறப்புக்களை கொண்டதாக விளங்கும் நிலையில் அதன் மறுசீரமைப்பு பணிக்கு அயராத அர்ப்பணிப்புடன் கூடியதாக வண. வத்துரகும்புரே தம்மரத்தன தேரர் அவர்களினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புகள் நன்றியுடன் நினைவு கூறப்பட வேண்டும் என்பதோடு, 2015 ஆம் ஆண்டிற்கு முன்னதாக பாதுகாப்பு செயலாளாராக சேவையாற்றிய தற்போதைய ஜனாதிபதியினால் சிவில் மற்றும் இராணுவ ஒத்துழைப்புடன் “யலி பிபிதெமு கூரகல” (கூரகலவின் மறுமலர்ச்சி) திட்டம் ஆரம்பித்து நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இத்திட்டத்திற்கு அப்போதைய ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான கௌரவ மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களினால் வழங்கப்பட்ட பங்களிப்பும் நினைவுக்கூறத்தக்கதாகும்.

இதன்போது, அதிமேதகு ஜனாதிபதியவர்கள் எட்டு மாத காலமாக மறுசீரமைப்பு பணிகள் இடம்பெற்று வரும் கூரகல விகாரையின் மேல் அடுக்கு கோபுரத்தை முதல் பெண்மணி அயோமா ராஜபக்‌ஷ மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு பங்களிப்புச் செய்த ஜெனரல் ஷவேந்திர சில்வா உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பார்வையிட்டார். பின்னர் 500 பிக்குகளின் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கான 150 பேர் அடங்கிய ஆளணி வளத்தை இராணுவம் வழங்கியிருந்ததோடு, அவர்களால் கடந்த எட்டு மாதங்களாக குகைகள் மற்றும் கல்வெட்டுகள், பிளவுகளை கொண்ட பாறையின் மீது கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொல்லியல் சின்னமான மேற்படி வழிபாட்டுத் தலத்தின் நிர்மாண பணிகளின் மிகுந்த ஆர்வம் காண்பித்து வந்த அதிமேதகு ஜனாதிபதியவர்கள் தலத்தின் மறுசீரமைப்பு பணிகளை கண்டு மகிழ்வுற்றதோடு, மறுசீரமைப்பு பணிகளை மேற்பார்வை செய்த பின்னர் விகாராதிபதியுடன் திட்டம் தொடர்பில் கலந்துரையாடினார். மேலும் கௌரவ பிரதமர் அவர்களே புத்த சாசன அமைச்சராகவும் நியமனம் வகிப்பதால் இவ் ஆண்டில் நாட்டின் வெசாக் தின நிகழ்வுகளை கூரகல விகாரைல் நடத்த தீர்மானித்துள்ளமை சிறப்பம்சமாகும். அதேநேரம் விகாரைக்கு அவசியமான வளங்களின் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட ஜனாதிபதியவர்கள் அவற்றை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.

அதனையடுத்து, விகாரைக்கு வருகை தந்திருந்த பக்தர்கள் மற்றும் பொது மக்களோடு சுமூகமாக கலந்துரையாடிய ஜனாதிபதியவர்கள் மக்கள் விடுத்த கோரிக்கைக்கிணங்க வெசாக் பண்டிகைக்கு முன்னதாக கல்தோட்டைக்கும் பலாங்கொடைக்கும் இடைப்பட்ட வீதியை தாமதமின்றி சீரமைக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் கௌரவ. டிக்கிரி கொப்பேகடுவ, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே, 61 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஸ்வர்ண பொத்தோட்ட மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த புராதன தளம் ஒரு மடாலயம், புனித தூபி (விகாரை), புத்தர் சிலை மற்றும் போதி மண்டபம் ( பூஜைகளுக்கான பந்தல்) ஆகியவையும், 500 அடி உயரமான படிக்கட்டு மற்றும் 'கூரகல குளம்' ஆகியவைகளை கொண்டமைந்தாக நிர்மாணிக்கப்பட உள்ளது. அதிமேதகு ஜனாதிபதியவர்களின் முயற்சியின் பேரில் 2013 தொல்பொருள் திணைக்களத்தினால் மேற்படி பகுதியிலுள்ள கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டிருந்ததோடு, அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் “யலி பிபிதெமு கூரகல” (கூரகலவின் மறுமலர்ச்சி) திட்டத்தின் கீழ் மேற்படி பகுதியில் அகழ்வாராய்ச்சி மற்றும் மறுசீரமைப்பு பணிகள் என்பன ஆரம்பிக்கப்பட்டன. அதற்கமைய 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாத்தில் விகாராதிபதியின் கோரிக்கைக்கிணங்க இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றை நிலையை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.