Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th September 2021 15:22:43 Hours

பரா ஒலிம்பிக் 2020 இல் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சு வரவேற்பு

பரா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வெற்றிகொண்ட வீரர்கள் நாடு திரும்பிய சில மணி நேரங்களுக்குள் டொரின்டன் சதுக்கத்தில் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சில் வைத்து கௌரவ விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, கௌரவ ராஜாங்க அமைச்சர் சேனுக விதானகமகே, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும தேசிய விளையாட்டு தேர்வு குழு தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் இன்று (8) காலை மேற்படி குழுவினருடன் அன்பான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

பரா ஒலிம்பிக் 2020 போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற கஜபா படையணியின் ஆணைபெறாத அதிகாரி 1 தினேஷ் பிரியந்த மற்றும் வெண்கல பதக்கம் வென்ற இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் கோப்ரல் துலான் கொடித்துவக்கு ஆகியோரும் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லும் முன்னர் உறுதி அளித்ததை போன்றே தங்களது பதக்கம் வெல்லும் கனவை நனவாக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தமைக்காக கௌரவ அமைச்சருக்கும் இராணுவ தளபதிக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர். இதன்போது பதக்கம் வென்றவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்களான திரு பிரதீப் நிஷாந்த ஆகியோரை வாழ்த்திய அமைச்சர், எதிர்காலத்திலும் அவர்களுக்கு அனைத்து ஆதரவும் ஊக்குவிப்பும் வழங்கப்படுமென உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய விளையாட்டு தேர்வுக் குழுவின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் ஜெனரல் ஷவேந்திர சில்வாவும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இதன்போது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்த தளபதி தங்கப் பதக்கம் வென்றவர் இராணுவத்தை மாத்திரமின்றி நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளார் எனவும் இராணுவத்தின் தடகளப் போட்டியாளர்கள் வரிசையில் தங்க பதக்கத்தை சேர்த்ததால் இராணுவத்தின் சாதனைகளையும் மெருகூட்டியுள்ளாரெனவும் தெரிவித்தார்.

அத்தோடு கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் நிறைவு கண்டதன் பின்னர் இராணுவ விளையாட்டு பணிப்பகத்துடன் இணைந்து மேற்படி இருவருக்குமான தனியானதொரு பாராட்டு விழாவை நடத்த எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்த இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதுபோன்ற உலக சாதனைகள் எதிர்காரத்திலும் புதிய வீரர்களுக்கு துடிப்பையும் ஊக்குவிப்பையும் ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டினார். அத்தோடு நாட்டில் வளர்ந்து வரும் விளையாட்டுத்துறை வீரர்கள் மத்தியில் ஆயுத படையினரின் பங்களிப்பை இன்னும் பல வருடங்களுக்கு நிலைக்கச் செய்யும் என்றும் தேசிய அணிகளுக்கு மேலும் நம்பிக்கையையும் வலிமையையும் சேர்ப்பதாக அமைந்திருக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கௌரவ இராஜாங்க அமைச்சர் சேனுக விதானகமகே, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அனுராத விஜேகோன்,மேலதிகச் செயலாளர் சந்திரரத்ன பல்லேகம, விளையாட்டுத்துறை மேம்பாட்டு திணைக்கள பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய, விளையாட்டுத்துறை மருத்துவ பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லால் விஜேநாயக்க, தேசிய விளையாட்டுக் குழு உறுப்பினர் சேவ்யா முத்தெட்டுவாகம, இலங்கை பரா ஒலிம்பிக் அணியின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வு) ராஜித அம்பேமொஹொட்டி, ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அதேநேரம் இராணுவம் இதுவரையில் கணிசமான எண்ணிக்கையிலான சர்வதேச பதக்கங்களை வெற்றிகொண்டுள்ளது. அதன்படி சர்வதேச பதக்கம் வென்றவர்கள் பட்டியலில் மேஜர் டங்கன் வைட், கோப்ரல் சுசந்திகா ஜயசிங்க, பணிநிலை சார்ஜன் பிரதீப் சஞ்சய, பணிநிலை சார்ஜன்ட் எச்.ஏ.சி ஹெட்டியாராச்சி மற்றும் பலர் உள்ளடங்குவர். மேலும், கடந்த சில ஆண்டுகளில் ஆயுதப்படை வீரர்கள் தேசிய அணிகளில் பல பன்முகப்படுத்தப்பட்ட விளையாட்டு துறைகளில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இன்றுவரை, இராணுவ விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் 02 பதக்கங்கள், பரா ஒலிம்பிக்கில் 04 பதக்கங்கள், உலக சாம்பியன்ஷிப்பில் 98 பதக்கங்கள், உலக இராணுவ விளையாட்டுகளில் 10 பதக்கங்கள், பொதுநலவாய நாடுகளின் போட்டிகளில் 26 பதக்கங்கள், ஆசிய விளையாட்டுக்களில் 279 பதக்கங்கள், லுப்தான்ஸா போட்டிகளில் 23 பதக்கங்கள் மற்றும் மேலும் பல சர்வதேச விளையாட்டுகளில் மேலும் 22 பதக்கங்களையும் வென்றுள்ளனர்.