21st July 2022 16:22:42 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் ஆலோசனையின் பேரில், இலங்கை சுங்கத்தின் தொழிநுட்பமயமாக்கல் செயற்பாடுகளை மேலும் எளிதாக்கும் வகையில் இலங்கை இராணுவ தகவல் தொழில்நுட்ப பணிப்பகம் கடந்த புதன்கிழமை (20) புதிய மென்பொருளை உருவாக்கியது.
இந்த மென்பொருளை உருவாக்குவதற்கு இலங்கை சமிக்ஞைப் படையணியின் மென்பொருள் பொறியியலாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிய பின்னர், அந்தப் படையணியின் மென்பொருள் பொறியியலாளர்கள் குழு ஒன்று சேர்ந்து ஈ மெமோ முறைமை ('E-Memo System' ) என்ற இந்த மென்பொருளை உருவாக்கினர்.
இந்த புத்தாக்க மென்பொருளின் வெளியீட்டு விழா கடந்த புதன்கிழமை (20) இடம்பெற்றதுடன், சுங்க பணிப்பகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய (ஓய்வு), தகவல் தொழில்நுட்பப் பணிப்பாளர் பிரிகேடியர் சஜித் லியனகே உட்பட அதிகாரிகள் மற்றும் தரவு பணியாளர்கள் குழுவும் கலந்து கொண்டனர்.
இலங்கை சுங்கம் தேசிய முன்னுரிமையாக அதன் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை துரிதப்படுத்துவதுடன் இந்த மென்பொருள் தரவுத்தளமானது அலுவலக எழுதுபொருட்களுக்கான மிகப்பெரிய செலவான 22 மில்லியன் ரூபாயை குறைந்தபட்சம் 50% குறைக்க பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.