Header

Sri Lanka Army

Defender of the Nation

16th July 2022 18:30:16 Hours

மதுரு ஓய இராணுவ பயிற்சி பாடசாலையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்தி புதிய விடுதித் திறப்பு

கொவிட்-19 தொற்று நோயினை நாட்டிலிருந்து இல்லாதொழிக்கும் நோக்கில், பயனுள்ள நடைமுறைகளைத் தயாரித்து, தனிமைப்படுத்தல் மையங்களைப் பராமரிப்பதற்கு இராணுவம் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, மதுரு ஓய இராணுவ பயிற்சி பாடசாலையில் 10 மில்லியன் ரூபாய் நிதி நன்கொடையைப் பயன்படுத்தி சிடிபி (CDB) வங்கியினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தின் முதல் மாடியின் புனரமைப்பு பணிகள் கடந்த புதன்கிழமை (06) பூர்த்தி செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் உதயந்த விஜேரத்ன (ஓய்வு) மற்றும் மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா (ஓய்வு) ஆகியோரின் ஒருங்கிணைப்பின் மூலம் சிடிசன் அபிவிருத்தி ‘Citizen Development Bank’ வங்கியிடமிருந்து இந்த 10 மில்லியன் ரூபா நிதி நன்கொடை, கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான தற்போதைய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இராணுவ பயிற்சி அதிகாரிகளுக்கு பயிற்சி வசதிகளை வழங்கும் முன்னணி மற்றும் முக்கியமான கல்வி நிலையமாக பயிற்சிப் பாடசாலையின் தரத்தையும் பேணுவதற்காக இராணுவ நிதியத்தில் இருந்து 2 மில்லியன் ரூபா நன்கொடையாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களினால் வழங்கப்பட்டது.

ஒரே நேரத்தில் 65 இராணுவ அதிகாரிகளுக்கு தங்கக்கூடிய மற்றும் விசேட தேவையுடைய பயிலுனர்களுக்கான வசதிகளுடன் கூடிய புதிய விடுதிக் கட்டிடத்தை மதுரு ஓய இராணுவ பயிற்சி பள்ளியின் தளபதி பிரிகேடியர் நஜீவ எதிரிசிங்க அவர்கள் திரைநீக்கம் செய்து திறந்து வைத்தார். 3 வது பொறியியல் படையணி படையினர் மற்றும் மதுரு ஓய இராணுவ பயிற்சி பள்ளியின் படையினரின் முயற்சியுடன் கொவிட்-19 தனிமைப்படுத்தல் நோக்கங்களுக்காக முன்னர் பயன்படுத்தப்பட்ட இந்த விடுதி கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு கொவிட்-19 தனிமைப்படுத்தல் மையமாக செயல்பட்டபோது, சிடிசன் அபிவிருத்தி வங்கியின் ‘Citizen Development Bank’ அதிகாரிகள் மதுரு ஓய இராணுவ பயிற்சி பாடசாலைக்கு விஜயம் செய்த போது, இந்தக் கட்டிடத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடுகளின் அவசியத்தைக் கண்டறிந்து, அதன் முழுமையான சீரமைப்புக்காக இந்த நிதியுதவியினை வழங்க முடிவு செய்தனர்.

அனுசரணையாளர்களான சிடிசன் அபிவிருத்தி வங்கி (‘Citizen Development Bank’) பிரதிநிதிகள், பணிநிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் கட்டிடத்தின் முதலாவது மாடியின் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.