13th February 2022 22:51:58 Hours
இல்லத்திலிருந்து “ இனிமையான இல்லமொன்றிற்கு செல்லும் விதமாக சாலியபுரவில் அமைந்துள்ள கஜபா படையணியின் தலைமையகத்திலிருந்து அநுராதபுரத்திலுள்ள 50க்கும் மேற்பட்ட போரில் அங்கவீனமுற்ற வீரர்களை பராமரிக்கும் “பிரேவ் ஹார்ட்ஸ்” என அறியப்படும் “அபிமன்சல புனர்வாழ்வு நிலையம் – 1 க்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது பாரியாரும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான திருமதி சுஜீவா நெல்சன் அவர்களுடன் வியாழக்கிழமை (10) திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது பாரியாருக்கு அபிமன்சல புனர்வாழ்வு நிலையம் – 1 இன் தளபதி பிரிகேடியர் ஷிரான் ஏக்கநாயக்க அவர்களினால் அங்கவீனமுற்ற போர் வீரர்களுடன் இணைந்து வெற்றிலை வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது. அதனை ஏற்றுகொண்டதை தொடர்ந்து மாற்றுத்திறன் கொண்ட போர்வீரர்கள் ஓய்வெடுக்கும் வெளிப்புறப் பகுதிகள், உட்புற விளையாட்டுகளை தொகுதிகள், நீர் சிகிச்சை மற்றும் சுய சிகிச்சை மற்றும் பிற புத்துணர்வுச் செயற்பாடுகளுக்கான அமைப்புக்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
இதன்போது தந்தையொருவரை போன்று கனிவாகவும், அன்பாகவும் சில நிமிடங்களை அங்கு செலவிட்ட தளபதி போர் வீரர்களுடன் அமர்ந்து அவர்களின் குடும்பத்தாரின் நலன் தொடர்பில் விசாரித்ததோடு, சதுரங்கம் மற்றும் கெரம் போன்ற விளையாட்டுக்களிலும் கலந்துகொண்டார். தளபதியின் செயற்பாடுகள் மே 2009க்கு முன்னர் நமது எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக தங்களது கால்களையும் கைகளையும் தியாகம் செய்த அங்கவீனமுற்ற வீரர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தமை சிறப்பம்சமாகும். பின்னர் தளபதியவர்கள் மேற்படி வளாகத்திலுள்ள இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் அமைத்துக்கொடுக்கப்பட்ட நூலகம் மற்றும் விடுதி வளாகங்களை தனித்தனியே மேற்பார்வை செய்ததோடு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இவ்விஜயத்தின் மற்றுமொரு அம்சமாக அங்கிருந்த அங்கவீனமுற்ற அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடி அவர்களின் மீது கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக அவர்களிடம் நலம் விசாரித்த பின்னர் அவர்களின் மருத்துவ தேவைகள் எந்த அளவில் பூர்த்தி செய்யப்படுகின்ற என்பது தொடர்பிலும் ஆராய்ந்தார். அதேபோல் அவர்களது திறன்களை ஆய்வு செய்யும் விதமாக போர் வீரர்களின் தோட்டக்கலை, சேதன பசளை உற்பத்திச் செயற்பாடுகள் மற்றும் ஏனைய வெளிக்கள செயற்பாடுகள் என்பன தொடர்பிலும் ஆராய்தார். உடல் ஊனமுற்ற போர் வீரர்களுக்காக பிரத்தியேகமாக நிறுவப்பட்ட உலகிலுள்ள ஒரே சுகாதார சிகிச்சை நிலையமான மேற்படி தளத்தில் நவீன சிகிச்சை உபகரணங்கள் உள்ளடங்களாக அனைத்து உபகரணங்களையும் உள்ளடக்கியதாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். இதன்போது இறக்கமற்ற பயங்கரவாதிகளின் செயற்பாடுகளினால் மூளை செயலிழந்த மற்றும் முதுகெலும்பு பாதிப்பு, காது கேளாமை மற்றும் பார்வையிழப்பு போன்றவை பாதிக்கப்பட்டுள்ள வீரர்களின் அர்பணிப்புக்களை பாராட்டிய தளபதியவர்கள் அவர்களின் துணிச்சல் மற்றும் போர்க்களத்தில் மேற்கொண்ட விலைமதிப்பற்ற தியாகங்கள் தொடர்பிலும் எண்ணங்களை பகிர்ந்துகொண்டார்.
2009 இல் மனிதாபிமான நடவடிக்கைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் முன்பாக தங்களது இளமை பருவங்களில் பெரும் காயமடைந்த வீரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை அளித்து பராமரிக்கும் நோக்கில் பண்டைய இராசதானியான அனுராதபுரத்திலுள்ள தாமரைகள் நிறைந்த நுவரவெவ பகுதியின் இயற்கை எழில் நிறைந்த பகுதியில் மேற்படி அபிமன்சல – 1 என்னும் முதலாவது சிகிச்சை நிலையம் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
என்றும் பாராட்டுக்குரியவராக விளங்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் தற்போதைய அதிமேதகு ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும், அப்போதைய ஜனாதிபதியும் தற்போதைய கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் அங்கவீனமுற்ற வீரர்களின் தேவைப்பாடுகளை கருத்தில் கொண்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் பரப்பில் இராணுவத்தின் அமிமன்சல – 1 புனர்வாழ்வு நிலையத்தை நிறுவும் திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்ய முன்வந்தனர். இதேபோல், ஏனைய மூன்று புனர்வாழ்வு நிலையங்களான அபிமன்சல – 2, அபிமன்சல – 3 மற்றும் 'மிஹிந்து செத் மெதுர' ஆகியவற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட போர் வீரர்கள் பராமரிக்கப்பட்டு வருவதோடு அவர்களில் சிலர் நிரந்தரமாக கட்டில்களிலும் ஏனைய சிலர் சக்கர நாட்காளிகளிலும் வாழ்நாளை கழிக்க வேண்டியவர்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்விஜயத்தின் போது இராணுவ தளபதியவர்கள் விருந்தினர் பதிவேட்டில் தனது எண்ணங்களையும் பதிவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.