28th January 2022 09:00:52 Hours
கொழும்பு றோயல் கல்லூரியின்1980 ஆம் ஆண்டு (தமிழ் மொழிமூலம்) பழைய மாணவர் சங்கத்தின் நிதியுதவின் மூலம் யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு யாழ்ப்பாணம் அல்வாய் பிரதேசத்தில் வறிய குடும்பமொன்றுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி வீடு, 551 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் 4 வது இலங்கை சிங்கப் படையணியின் தொழில்நுட்ப திறன் மற்றும் ஆளணி வளத்தை பயன்டுத்தி நிர்மாணிக்கப்பட்டதோடு, சரியான தங்குமிடமின்றி மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்த ஏழை தாயான திருமதி தர்சன் யோகேஸ்வரிக்கு வழங்கி வைக்கப்பட்டது. புதன்கிழமை (26) நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, நன்கொடையாளர்களின் பிரதிநிதி திரு. இராஜேந்திரன் தியாகராஜா, 55 வது படைப் பிரிவு தளபதி பிரிகேடியர் பிரசன்ன குணரத்ன, 551 வது பிரிகேட் தளபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்து மத வழிபாடுகளுடன் சம்பிரதாயபூர்வமாக வீட்டின் சாவி பயனாளியிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த குடும்பத்தின் வறுமை நிலை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பாவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து அனுசரணையாளர்கள் திட்டத்திற்கு ஆதரவளிக்க முன்வந்தனர்.
இந்த நிகழ்வின் போது, இப்புதிய வீட்டிற்கு தேவையான உலர் உணவுப் பொதிகள் மற்றும் சில அத்தியாவசிய வீட்டுப் பொருட்களும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியினால் பயனாளிகளுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டதுடன், மேலும் பயனாளியின் பாடசாலைக் குழந்தைகளுக்கான எழுதுவினைபொருட்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் 55 வது படைப்பிரிவு தளபதி, 551 மற்றும் 552 வது பிரிகேட் தளபதிகள் பருத்தித்துறை பிரதி பொலிஸ் அத்தியட்கர் ,பருத்தித்துறை பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள் மற்றும் யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரும் கலந்து கொண்டனர்.